Saturday, May 11, 2013

பேச்சுப் போட்டி ஆண்டு - 9 -


             உலகத் தமிழரும் பூகோளக் கிராமமும்





“ மாற்றம் ஒன்றே மாறாதது ” என்பர்.


இன்று நாம் Digital world – எண்ணிம யுகத்தில் வாழ்கிறோம்.கணிப்பொறியும் (computer) இணையமும் (Internet) வீட்டில் இருந்த படியே எம்மை உலகத்தோடு இணைத்து வைத்திருக்கிறது.
காணொளி, வானொலி, பத்திரிகை, சஞ்சிகை, கடிதப் போக்குவரத்து, கணணி வழித் தொலைபேசிப் பாவனை, சமூகவலையமைப்புகள் எல்லாம் நம்மை உறவுகளோடும் தகவல்களோடும் இணைத்து வைத்திருக்கின்றன.


வீதி விதிமுறைகள்,புகையிரதங்கள் கணணியூடாக இயங்குகின்றன. உலகளாவிய வாணிபம் நடைபெறுகிறது. பல்கலைக் கழகங்கள் பட்டங்களை வழங்குகின்றன. வங்கிகள் பணங்களை மாற்றீடு செய்கின்றன. நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. சகல தகவல்களும் காரியாலயங்களும் ஒரு சிறு கணிப்பொறிக்குள் அடங்கி விட்டன.
பூகோளம் கிராமமாகி விட்டது.


அது போல தமிழும் காலா காலமாக மாற்றங்களுக்கு உட்பட்டுத் தன்னைப் புதுப்பித்தும் புத்துருப் பெற்றும் வந்திருக்கிறது. கல்லிலும் ஓலையிலும் காகிதத்திலும் எழுதிய காலங்கள் போய் இன்று கணணித்திரையில் தமிழ் எழுதுகிறோம்.எண்ணிம யுகத்துக்குள் தமிழும் புகுந்து விட்டது.


அதே நேரம் கடந்த 30 வருட காலத்துக்குள் ஏற்பட்ட தமிழரின் புலப்பெயர்வு உலகத் தமிழரை உருவாக்கியுள்ளது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் யாரோ ஒரு தமிழன் தமிழாலும் அதன் விழுமியங்களாலும் உலகத் தமிழர்களோடு இணைந்திருக்கிறான்.


தமிழருடய வாழ்விலும் உலக அரங்கிலும் சம காலத்தில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்கள் தமிழ் இது வரை கண்டிராதது. அதனால் தமிழுக்கு உலக மொழிகளும் உலகமொழிகளுக்குத் தமிழும் அறிமுகமாகியுள்ளன. மொழி ஒரு பண்பாட்டின் திறவுகோல் என்பர். தான் வாழும் நாட்டு மொழியின் பரீட்சயம் தமிழுக்கு புதிய பண்பாடுகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்பது காலம் நமக்குத் தந்த பரிசாகும்.


இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதனை இன்னும் மேலே எடுத்துச் செல்வதும் தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதும் தாய்மொழியையும் பழகு மொழியையும் சம அளவில் அறிந்து வைத்திருக்கின்ற நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கின்ற அரிய வாய்ப்பும் தார்மீகக் கடைமையுமாகும்.


 ”வானம் அறிந்த அனைத்தும் அறிந்து வாழ்க தமிழ்மொழி”



ஆண்டு 9 ( Non HSC ) எழுதிய ஆசிரியர்; யசோதா.பத்மநாதன். ( 11.02.2012 )

பேச்சுப் போட்டி: ஆண்டு 9 / 10


                                     திராவிடப் பண்பாட்டின் திறவுகோல்

                      ஆண்டு; 9 / 10                 30.03.2013         எழுத்து: யசோதா.ப.



உலகில் 4000 ற்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. தலைமுறை தலைமுறையாக மனித சமுதாயம் சம்பாதித்த அறிவை எல்லாம் மொழி தான் தன்னுள் வைத்திருக்கிறது.

இப் பல்லாயிரக்கணக்கான மொழிகளுக்குள் எட்டு மொழிகளே செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுள்ளன. அவை, கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், தமிழ், அரபு, சீனம், ஹிப்ரூ என்பனவாகும். இவை எவ்வாறு, என்ன அளவுகோலால் வகைப்படுத்தப்பட்டன என்ற ஐயம் உங்களுக்கு எழலாம். அவை அம் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப்பண்பு, பண்பாடு, கலை, பட்டறிவு அனுபவ வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லாத் தன்மை, இலக்கிய வளம், உயர்வான சிந்தனை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.

பல்லாயிரக்கனக்கான மொழிகளுக்குள் தமிழ் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் திகழ்வது நமக்கெல்லாம் பெருமை அல்லவா?
சோக்கிரட்டீஸ், அரிஸ்டோட்டல், பிளேட்டோ போன்ற அறிஞரின் சிந்தனைக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறது கிரேக்க மொழி. பயிற்சி தான் முழுமையை ஏற்படுத்துகிறது என்று சொன்னது இலத்தீன் மொழி, குர்ரான் என்ற சமயப்பொக்கிஷத்தை உலகுக்கு அளித்தது அரபு மொழி. ஜென் தத்துவங்களை உலகுக்குத் தந்தது சீன மொழி. கணித இலக்க முறைகளை உலகுக்கு வழங்கியது பாரசீக மொழி, ஹிப்ரூ மொழி உலகுக்கு பைபிளைத் தந்தது. வேதங்களையும் உபநிடதங்களையும் உலகுக்கு வழங்கி சிறப்புப் பெற்றது சமஸ்கிருத மொழி.

தமிழ் என்ன வகையில் சிறப்புப் பெற்றிருக்கின்றது என்று தெரியுமா?
திராவிடப் பண்பாட்டின் திறவுகோலாகத் தமிழ் இருக்கிறது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள், காப்பியங்கள் போன்றவை திராவிட வாழ்வின் பெரும் பொக்கிஷங்கள் ஆகும்.

             ”யாதும் ஊரே: யாவரும் கேளிர்”