Saturday, May 11, 2013

பேச்சுப் போட்டி ஆண்டு - 9 -


             உலகத் தமிழரும் பூகோளக் கிராமமும்





“ மாற்றம் ஒன்றே மாறாதது ” என்பர்.


இன்று நாம் Digital world – எண்ணிம யுகத்தில் வாழ்கிறோம்.கணிப்பொறியும் (computer) இணையமும் (Internet) வீட்டில் இருந்த படியே எம்மை உலகத்தோடு இணைத்து வைத்திருக்கிறது.
காணொளி, வானொலி, பத்திரிகை, சஞ்சிகை, கடிதப் போக்குவரத்து, கணணி வழித் தொலைபேசிப் பாவனை, சமூகவலையமைப்புகள் எல்லாம் நம்மை உறவுகளோடும் தகவல்களோடும் இணைத்து வைத்திருக்கின்றன.


வீதி விதிமுறைகள்,புகையிரதங்கள் கணணியூடாக இயங்குகின்றன. உலகளாவிய வாணிபம் நடைபெறுகிறது. பல்கலைக் கழகங்கள் பட்டங்களை வழங்குகின்றன. வங்கிகள் பணங்களை மாற்றீடு செய்கின்றன. நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. சகல தகவல்களும் காரியாலயங்களும் ஒரு சிறு கணிப்பொறிக்குள் அடங்கி விட்டன.
பூகோளம் கிராமமாகி விட்டது.


அது போல தமிழும் காலா காலமாக மாற்றங்களுக்கு உட்பட்டுத் தன்னைப் புதுப்பித்தும் புத்துருப் பெற்றும் வந்திருக்கிறது. கல்லிலும் ஓலையிலும் காகிதத்திலும் எழுதிய காலங்கள் போய் இன்று கணணித்திரையில் தமிழ் எழுதுகிறோம்.எண்ணிம யுகத்துக்குள் தமிழும் புகுந்து விட்டது.


அதே நேரம் கடந்த 30 வருட காலத்துக்குள் ஏற்பட்ட தமிழரின் புலப்பெயர்வு உலகத் தமிழரை உருவாக்கியுள்ளது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் யாரோ ஒரு தமிழன் தமிழாலும் அதன் விழுமியங்களாலும் உலகத் தமிழர்களோடு இணைந்திருக்கிறான்.


தமிழருடய வாழ்விலும் உலக அரங்கிலும் சம காலத்தில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்கள் தமிழ் இது வரை கண்டிராதது. அதனால் தமிழுக்கு உலக மொழிகளும் உலகமொழிகளுக்குத் தமிழும் அறிமுகமாகியுள்ளன. மொழி ஒரு பண்பாட்டின் திறவுகோல் என்பர். தான் வாழும் நாட்டு மொழியின் பரீட்சயம் தமிழுக்கு புதிய பண்பாடுகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்பது காலம் நமக்குத் தந்த பரிசாகும்.


இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதனை இன்னும் மேலே எடுத்துச் செல்வதும் தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதும் தாய்மொழியையும் பழகு மொழியையும் சம அளவில் அறிந்து வைத்திருக்கின்ற நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கின்ற அரிய வாய்ப்பும் தார்மீகக் கடைமையுமாகும்.


 ”வானம் அறிந்த அனைத்தும் அறிந்து வாழ்க தமிழ்மொழி”



ஆண்டு 9 ( Non HSC ) எழுதிய ஆசிரியர்; யசோதா.பத்மநாதன். ( 11.02.2012 )

No comments:

Post a Comment