Saturday, May 11, 2013

பேச்சுப் போட்டி ஆண்டு - 9 -


             உலகத் தமிழரும் பூகோளக் கிராமமும்





“ மாற்றம் ஒன்றே மாறாதது ” என்பர்.


இன்று நாம் Digital world – எண்ணிம யுகத்தில் வாழ்கிறோம்.கணிப்பொறியும் (computer) இணையமும் (Internet) வீட்டில் இருந்த படியே எம்மை உலகத்தோடு இணைத்து வைத்திருக்கிறது.
காணொளி, வானொலி, பத்திரிகை, சஞ்சிகை, கடிதப் போக்குவரத்து, கணணி வழித் தொலைபேசிப் பாவனை, சமூகவலையமைப்புகள் எல்லாம் நம்மை உறவுகளோடும் தகவல்களோடும் இணைத்து வைத்திருக்கின்றன.


வீதி விதிமுறைகள்,புகையிரதங்கள் கணணியூடாக இயங்குகின்றன. உலகளாவிய வாணிபம் நடைபெறுகிறது. பல்கலைக் கழகங்கள் பட்டங்களை வழங்குகின்றன. வங்கிகள் பணங்களை மாற்றீடு செய்கின்றன. நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. சகல தகவல்களும் காரியாலயங்களும் ஒரு சிறு கணிப்பொறிக்குள் அடங்கி விட்டன.
பூகோளம் கிராமமாகி விட்டது.


அது போல தமிழும் காலா காலமாக மாற்றங்களுக்கு உட்பட்டுத் தன்னைப் புதுப்பித்தும் புத்துருப் பெற்றும் வந்திருக்கிறது. கல்லிலும் ஓலையிலும் காகிதத்திலும் எழுதிய காலங்கள் போய் இன்று கணணித்திரையில் தமிழ் எழுதுகிறோம்.எண்ணிம யுகத்துக்குள் தமிழும் புகுந்து விட்டது.


அதே நேரம் கடந்த 30 வருட காலத்துக்குள் ஏற்பட்ட தமிழரின் புலப்பெயர்வு உலகத் தமிழரை உருவாக்கியுள்ளது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் யாரோ ஒரு தமிழன் தமிழாலும் அதன் விழுமியங்களாலும் உலகத் தமிழர்களோடு இணைந்திருக்கிறான்.


தமிழருடய வாழ்விலும் உலக அரங்கிலும் சம காலத்தில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்கள் தமிழ் இது வரை கண்டிராதது. அதனால் தமிழுக்கு உலக மொழிகளும் உலகமொழிகளுக்குத் தமிழும் அறிமுகமாகியுள்ளன. மொழி ஒரு பண்பாட்டின் திறவுகோல் என்பர். தான் வாழும் நாட்டு மொழியின் பரீட்சயம் தமிழுக்கு புதிய பண்பாடுகளின் வாசல்களைத் திறந்து விட்டிருப்பது காலம் நமக்குத் தந்த பரிசாகும்.


இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதனை இன்னும் மேலே எடுத்துச் செல்வதும் தமிழுக்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதும் தாய்மொழியையும் பழகு மொழியையும் சம அளவில் அறிந்து வைத்திருக்கின்ற நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கின்ற அரிய வாய்ப்பும் தார்மீகக் கடைமையுமாகும்.


 ”வானம் அறிந்த அனைத்தும் அறிந்து வாழ்க தமிழ்மொழி”



ஆண்டு 9 ( Non HSC ) எழுதிய ஆசிரியர்; யசோதா.பத்மநாதன். ( 11.02.2012 )

பேச்சுப் போட்டி: ஆண்டு 9 / 10


                                     திராவிடப் பண்பாட்டின் திறவுகோல்

                      ஆண்டு; 9 / 10                 30.03.2013         எழுத்து: யசோதா.ப.



உலகில் 4000 ற்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. தலைமுறை தலைமுறையாக மனித சமுதாயம் சம்பாதித்த அறிவை எல்லாம் மொழி தான் தன்னுள் வைத்திருக்கிறது.

இப் பல்லாயிரக்கணக்கான மொழிகளுக்குள் எட்டு மொழிகளே செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுள்ளன. அவை, கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், பாரசீகம், தமிழ், அரபு, சீனம், ஹிப்ரூ என்பனவாகும். இவை எவ்வாறு, என்ன அளவுகோலால் வகைப்படுத்தப்பட்டன என்ற ஐயம் உங்களுக்கு எழலாம். அவை அம் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப்பண்பு, பண்பாடு, கலை, பட்டறிவு அனுபவ வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லாத் தன்மை, இலக்கிய வளம், உயர்வான சிந்தனை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.

பல்லாயிரக்கனக்கான மொழிகளுக்குள் தமிழ் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் திகழ்வது நமக்கெல்லாம் பெருமை அல்லவா?
சோக்கிரட்டீஸ், அரிஸ்டோட்டல், பிளேட்டோ போன்ற அறிஞரின் சிந்தனைக் கருத்துக்களைக் கொண்டிருக்கிறது கிரேக்க மொழி. பயிற்சி தான் முழுமையை ஏற்படுத்துகிறது என்று சொன்னது இலத்தீன் மொழி, குர்ரான் என்ற சமயப்பொக்கிஷத்தை உலகுக்கு அளித்தது அரபு மொழி. ஜென் தத்துவங்களை உலகுக்குத் தந்தது சீன மொழி. கணித இலக்க முறைகளை உலகுக்கு வழங்கியது பாரசீக மொழி, ஹிப்ரூ மொழி உலகுக்கு பைபிளைத் தந்தது. வேதங்களையும் உபநிடதங்களையும் உலகுக்கு வழங்கி சிறப்புப் பெற்றது சமஸ்கிருத மொழி.

தமிழ் என்ன வகையில் சிறப்புப் பெற்றிருக்கின்றது என்று தெரியுமா?
திராவிடப் பண்பாட்டின் திறவுகோலாகத் தமிழ் இருக்கிறது. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள், காப்பியங்கள் போன்றவை திராவிட வாழ்வின் பெரும் பொக்கிஷங்கள் ஆகும்.

             ”யாதும் ஊரே: யாவரும் கேளிர்”

Saturday, February 23, 2013

வாழ்த்து அட்டை




கடந்த வருட இறுதியில் ஆண்டு ஒன்பது வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் நத்தார் பண்டிகையின் வருகையை ஒட்டி தமிழில் ஒரு வாழ்த்து அட்டையைத் தமக்குப் பிடித்தமான ஒருவருக்குச் செய்யுமாறு வகுப்பில் செய்முறைப் பயிற்சியாகக் கொடுத்திருந்தேன்.

அரன் என்ற மாணவன் வகுப்பில் தன்னுடய தாயாருக்கு வரைந்த சுயமாக வகுப்பில் சுமார் ஐந்து நிமிடத்தில் எழுதி வழங்கிய வாழ்த்து அட்டை இது.

அருகாக ஒரு இதயம் படமும் வரைந்திருந்தார். வாழ்த்து இது தான்.

அன்புள்ள அம்மாவிற்கு,


”நீங்கள் செய்யும் பருப்பு

போக்க வைக்கும் பசிப்பு

புது வருடப்  பிறப்பு

கொண்டாடுங்கள் சிறப்பு

சண்டாவும் வருவார் - யேசு

நாதரும் வருவார்

மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் - பாது

காப்பாகக் கொண்டாடுங்கள்.


உங்களுடய செல்ல மகன்,
அரன்.

Saturday, April 21, 2012

அவுஸ்திரேலியப் பழங்குடிகளின் நாடோடிக் கதை

இணையத்தில் இருந்த கதையைத் தெரிவு செய்து தமிழில் மொழிபெயர்த்தவர்:
அனந்தராம்.ஸ்ரீரங்கநாத ஐயர்.
17.03.2012



ஒரு நாள் அவுஸ்திரேலிய பூர்வ குடிகள் ஒரு குழுவாகக் கங்காரு வேட்டையாடப் போனார்கள். அவர்கள் மரங்களுக்கு அருகே சென்று ஓய்வு எடுத்தார்கள். வேட்டைக்காரர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டே கதைகள் சொல்லிக் கொண்டு, கைகளைச் சூடாக்கிக் கொண்டிருந்தார்கள். பின்னர் கீழ்வானில் அவர்கள் அழகான ஒரு வானவில்லைக் கண்டார்கள்.

அது ஒரு வானவில் பாம்பு. அது தனது பழைய நீர் ஆதாரத்தில் இருந்து மற்றொன்றுக்கு நகரும். வேட்டைக்காரர்களுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. ஏனென்றால் வேட்டைக் காரர்களுக்கு அந்தப் பாம்பு தம் கூடாரத்துக்கு அருகில் இருக்கும் நீர் ஆதாரத்துக்கு அந்த வானவில் பாம்பு வந்து விடும் என்று பயம்.அவர்கள் அவசரமாக வீட்டுக்குத் திரும்பும் போது அன்று அவர்கள் இரண்டு கங்காருகளை மட்டும் பிடித்தனர். அது அனைவருக்கும் சாப்பிடக் காணாது. ஆனாலும் அந்த இரவு ஒரு பெரிய தூங்காத இரவு.

அந்த இரவு ஒரு வேட்டைக் காரன் வயதான ஆண்களிடம் போய் வானவில் பாம்பைப்பற்றிக் கேட்டான். வயதானவர்கள்,’ வானவில் பாம்பு உலகத்தை உருவாக்கிய ஒரு பிராணி. முதன் முதலில் பூமி ஒரு பெரிய தரிசு நிலமாக இருந்தது.வானவில் பாம்பு பூமியச் சுற்றி வந்த போது அதன் உடலின் இயக்கத்தினால் மலைகள் மற்றும் ஆறுகள் பள்ளங்கள் தோண்டப்பட்டன. இறுதியில் வானவில் களைப்பால் ஒரு நீர் ஆதாரத்தில் ஓய்வெடுத்தது.இந்த உலகத்தை உருவாக்கியது இந்த வானவில் பாம்பு தான்’ என்றார்கள்.

அதனால் இந்த நாள் வரை பூர்வ குடிகள் வானவில் பாம்பை ஒரு நீர் ஆதாரத்தில் இருந்து மற்றொரு நீர் ஆதாரத்துக்குப் போகும் போது தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள்.

மொழிபெயர்ப்பு: அனந்தராம். ஸ்ரீரங்கநாத ஐயர்.
ஆண்டு 9 (Non HSC)
17.03.2012

கிரேக்க நீதிக் கதை




மூலக்கதை: நற்றலி.குடானாஸ் என்ற தன் சினேகிதியிடம் இருந்து.

கேட்டு எழுதியவர்: சிந்தியா.பகீரதன்

சிங்கமும் எலியும்

ஒரு நாள் காட்டினுள் காட்டு ராசாவான சிங்கம் நித்திரையில் ஆழ்ந்திருந்தது. அந்தச் சிங்கத்தின் மேல் ஒரு எலி ஓடியது. இதனால் சிங்கம் விழித்தெழுந்தது. கோபம் கொண்ட சிங்கம் எலியைப் பிடித்து, ’நீ எனக்கு இன்று நல்ல காலைச் சாப்பாடாகப் போகிறாய்’ என்று கர்ஜித்தது. ஆனால் எலியோ சிங்கத்திடம் காட்டுராஜாவே என்னை சாப்பிடாதீர்கள் எனக் கெஞ்சிக் கேட்டது.

சிங்கத்திடம் இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றோ ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன் என்றது. சிங்கமோ ’நீ எனக்கு உதவி செய்யப் போகிறாயா’ என்று எலியை ஏளனம் செய்தது. இருந்தாலும் எலியைக் கொல்லாமல் போக விட்டது.

சில நாட்களின் பின் வேடுவர்கள் அந்தச் சிங்கத்தை பொறியில் வீழ்த்தினர். வலையில் அகப்பட்ட சிங்கம் பலமாகக் கர்ஜித்து அழுதது. அந்தச் சிறிய எலி சிங்கத்தின் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வந்து வலையைத் தன் பல்லினால் வெட்டி சிங்கத்தைத் தப்பிப் போக உதவியது. சிங்கம் இந்தச் சின்ன எலி என்னைக் காப்பாற்றி விட்டதே என்று வெட்கப்பட்டு எலிக்கு தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிச் சென்றது.

இந்தக் கதையின் நீதிக் கருத்து:

உடலில் பெரியவராக இருப்பதால் தான் மேலானவர் என்று ஆணவம் கொள்ளக் கூடாது. சிறிய பலமற்ற ஒருவர், தன்னிலும் பெரிய பலமான ஒருவருக்கு உதவும் சந்தர்ப்பங்களும் வரும்.

கேட்டு எழுதியவர்:சிந்தியா.பகீரதன்.
ஆண்டு 9 (Non HSC)
17.03.2012


இந்திய நாடோடிக் கதை





கேட்டு எழுதியவர்: அரன்.உதயகுமார்

ஆமையும் முயலும்

ஒரு நாள் ஒரு முயல் ஆமையைப் பார்த்துக் கேலி செய்தது. கவலையடைந்த ஆமை முயலிடத்தைப் பார்த்து ஒரு ஓட்டப் போட்டிக்குப் பங்கு பெறக் கேட்டார்.முயல் ஏற்றுக் கொண்டார்.

பகலில் ஆமையும் முயலும் ஓட ஆயத்தமாக நின்றார்கள். போட்டி ஆரம்பமாகியது. முயல் வேகமாக ஓடியது. ஆமை மெதுவாக நகர்ந்தது. முயல் இறுதியில் “அந்த ஆமை மெதுவாக வருகிறது. நான் இங்கே தூங்குகிறேன். அது கிட்ட வந்தவுடன் ஓடி விடுவோம்” என்று தூங்கியது. ஆமை மெல்லமா நடந்து போய் முயலைத் தாண்டி போட்டியை முடித்தது. ஆகையால் முயல் தோற்றது.

இன்னொரு நாள் ஒரு சிங்கம் அதனின் நண்பனுக்கு தகவல் கொடுக்க இருந்தது. முயலையும் ஆமையையும் சிங்கம் கேட்டதால் அவர்கள் இரண்டு பேரும் ஓம் என்று சொன்னார்கள். அதனால் அவர்களை அந்தத் தகவலைக் கொடுக்க சிங்கம் அனுமதித்தது. அந்தத் தகவலைக் கொடுக்க ஆற்றையும் நிலத்தையும் தாண்டிப் போக வேண்டும்.அதனால் தரையில் போகும் போது முயல் ஆமையைத் தூக்கிக் கொண்டு ஓடியது.ஆற்றைக் கடக்கும் போது ஆமை முயலைத் தூக்கிக் கொண்டு நீந்தியது.

ஆகையால் தகவல் மற்றச் சிங்கத்துக்குக் கிடைத்தது.

கேட்டு எழுதியவர்: அரன்.உதயகுமார்.
ஆண்டு 9 (Non HSC)
17.03.20122


உகண்டா நாட்டு நாடோடிக் கதை



மூலம்: worldwide web; மொழிபெயர்ப்பு: அபிநயா. சுதேஸ்குமார்.
17.03.2012

கொல்லனுக்கு வந்த சோதனை


முன்னொரு காலத்தில் உகண்டா என்ற நாட்டில் இடியமீன் என்ற கொல்லன் இருந்தான். அவன் ஒரு திறமையான கொல்லன். ஒவ்வொரு நாளும் பலர் வந்து நின்று அவன் வேலை செய்வதைப் பார்த்து ரசிப்பார்கள். ஒரு நாள் இடியமீன் வேலைசெய்து இருக்கும் போது, அரச காவலன் ஒருவன் அவனிடம் வந்து அவனை அரசன் பார்க்க விரும்புவதாகக் கூறினான்.

இடியமீன் உடனடியாக அரச மாளிகைக்குச் சென்றான். அங்கு அரசன் சொன்னார், ’நீ ஒரு திறமையான கொல்லன் என்ற படியால் உனக்கு ஒரு முக்கியமான வேலை வைத்திருக்கிறேன்.” என்றார். அரசன் அங்கு தயாராக வைத்திருந்த இரும்புத்துண்டுகளை வைத்து ஒரு மனிதனை உருவாக்க வேண்டும் என்றார். அது சிலையாக அல்லாமல் நடக்க, பேச,யோசிக்கக் கூடிய மனிதனாக இருக்க வேண்டும்.

“ஆம் அரசே” என்று சொல்லி மிகக் குழப்பத்துடன் வீடு திரும்பினான் இடியமீன். ஒவ்வொரு நாளும் அரசனின் ஆணையை எப்படி நிறைவேற்றுவது என யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் இடியமீன்.

ஒரு நாள் அவன் காடு வழியாகச் சென்றுகொண்டிருந்த போது ஒரு விசித்திர மனிதனைச் சந்தித்தான். அந்த மனிதன் இடியமீனிடம்,’ஏன் கவலையாக இருக்கிறாய்” எனக் கேட்டான்.அதற்கு இடியமீன் தனக்கு வந்த சோதனையைச் சொன்னான். அதற்கு அந்த விசித்திர மனிதன்,”உனக்கு நான் ஒரு ஆலோசனை கூறுகிறேன்.”என்று சொல்லி அரசனிடம் 1000 வண்டில் கரி அதுவும் தலைமயிரை எரித்து உருவாக்கப்பட்ட கரியும் 1000 குடம் கண்ணீரும் தேவை எனக் கேட்குமாறு சொன்னான்.

இடியமீனும் இந்த ஆலோசனைப்படி அரசனிடம் சென்று அந்த விசித்திர மனிதன் கூறிய பொருட்கள் தேவை என அரசனிடம் கேட்டான். அரசனும் தருவதாகக் கூறி தனது பணியாட்களிடம் தலைமயிரை வளிக்குமாறு சொன்னார்.ஆனால் அவர்களால் 1000 குடம் கண்ணீரும் 1000 வண்டில் கரியும் எடுக்க முடியவில்லை.

அப்போது தான் அரசன் அது ஒரு முடியாத காரியம் என உணர்ந்து தனது தவறையும் உணர்ந்தார்.

இடியமீனும் மிக்க மகிழ்ச்சியோடு வீடு சென்றான்.

மொழிபெயர்ப்பு:அபிநயா.சுதேஸ்குமார்
ஆண்டு 9 (Non HSC)
17.03.2012