Monday, April 11, 2011

கைத் தொலைபேசியின் நன்மைகளும் தீமைகளும்


நவீன விஞ்ஞான வளர்ச்சியில் ஒன்று செல்போன் என அழைக்கப் படும் கைத்தொலைபேசி ஆகும்.ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருப்பவருடன் தொடர்பு கொண்டு பேச முடியும். உலகத்தில் எங்கிருந்தாலும் எந் நேரத்திலும் பேச முடியும்.ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் இன்று எல்லோரும் கைத்தொலைபேசி வைத்திருக்கிறார்கள்.

இதன் மூலம் கதைப்பது மட்டுமல்லாமல் செய்திகள் அனுப்பவும் ஒளிப்படங்கள் எடுக்கவும் அதை இன்னொருவருக்கு அனுப்பவும் பாடல்கள்,செய்திகள் கேட்பதற்கும் விளையாட்டுக்களை விளையாடுவதற்கும் கூடப் பயன் படுத்தலாம்.

அவசர தேவைகளின் போது,உதாரணமாக விபத்துக்கள் ஏற்படும் போது பொலிஸையோ அம்புலன்ஸையோ அழைப்பதற்கு இது முக்கியமாக உதவுகிறது.மற்றும் உறவினர்களதும் முக்கியமானவர்களதும் விலாசங்கள்,தொலைபேசி இலக்கங்கள்,அவர்களது பிறந்த நாள் மற்றும் முக்கியமான நாட்களையும் இலகுவாக இதில் பதிவு செய்து வைக்கலாம்.

இவற்றை விட சமூக விரோத செயல்கள் நடைபெறும் போது அவற்றைக் கைத் தொலைபேசியில் பதிவு பண்ணி பொலிஸில் ஒப்படைப்பதன் மூலம் குற்றச் செயல்களைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்தியாவில் கைத்தொலைபேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 70 கோடி.ஆனால் தங்களுக்கென்று தனிக் கழிவறைகளை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 36 கோடியே 60 லட்சம்.

இவ்வாறான நன்மைகள் இருந்தாலும் கைத்தொலைபேசியால் தீமைகளும் ஏற்படுகின்றன. அதிகமாகக் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களுக்கு  அதிலிருந்து வரும் கதிரியக்கத்தால் (electronic waves) மூளை சம்பந்தமான நோய்கள், மூளைப் புற்று நோய், காது கேட்டலில் பிரச்சினைகள்,உறக்கம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.

வாகனம் ஓட்டும் போது பலர் கைத்தொலைபேசியில் பேசிய வணணம் செல்வதால் அதிகமான விபத்துக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்படுகின்றன.இளைஞர்களும் யுவதிகளும் இதனை அதிகளவில் பாவிப்பதால் அவர்கள் கைத்தொலைபேசி இல்லாமல் வாழமுடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப் படுகிறார்கள்.

எனது கருத்தில் கைத்தொலைபேசி இன்றய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.ஆனால் ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழி போல் அதிகளவில் கைத்தொலைபேசிகளைப் பாவிப்பதால் பல தீய விளைவுகளையும் எதிர் கொள்ள வேண்டி வரும்.

அவற்றில் இருந்து நீங்கள் கைத்தொலைபேசியின் நன்மை தீமைகளை விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

ஜெ.மயூரி.
ஆண்டு 9+

(12.03.2011 அன்று வகுப்பு வேலைக்காகப் பேச்சாகச் சமர்ப்பிக்கப் பட்ட ஒப்படை)

No comments:

Post a Comment