Tuesday, April 12, 2011

ஆரோக்கியமான வாழ்க்கை


இன்று நான் உங்கள் முன் ஆரோக்கிய வாழ்க்கை பற்றிப் பேசப் போகிறேன்.

இந்த உலகில் வாழ்கின்ற எல்லா மனிதர்களுக்கும் ஆரோக்கிய வாழ்க்கை என்பது மிக முக்கியமானதாகும்.ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மூன்று விடயங்கள் மிக முக்கியமானதாக அமைகின்றன.
1.சத்துள்ள உணவு
2.உடற்பயிற்சி
3.சுத்தமான சூழ்நிலை.

முதலாவதாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமானது சத்துள்ள உணவு.

எமது வாழ்க்கைக்கு சுத்தமான நீர்,காற்று,சக்தி என்பன மிகவும் அவசியமானவை. எமக்குத் தேவையான சக்தியை நாம் உணவில் இருந்தே பெறுகிறோம்.நாம் உண்ணும் உணவு சத்துள்ளதாகவும் சமநிலையானதாகவும் இருக்க வேண்டும்.

தினமும் நாம் உண்ணுகின்ற உணவில் சகல சத்துக்களும் தேவையான அளவில் சேர்க்கப் படவேண்டும்.5 வகையான மரக்கறிகளும் இரண்டு வகையான பழவகைகளும் எமது உணவில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மாப்பொருள்,கனிப்பொருள்கள்,புரதப் பொருள் என்பனவற்றை எமது உணவில் சேர்த்துக் கொள்ளல் அவசியம்.கொழுப்புச் சத்தை அதாவது எண்ணை, நெய் போன்றவற்றை எமது சாப்பாட்டில் குறைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் அவையும் எமது ஆரோக்கியத்துக்குச் சிறிய அளவில் பங்களிப்புச் செய்கின்றன.

இன்றய விஞ்ஞான யுகத்தில் மிக விரைவாகத் தயாரிக்கக் கூடிய உணவுகளையே அதிகமானோர் விரும்புகின்றனர்.அதிலும் சிறப்பாக எம்மைப் போன்ற இளம் வயதினர் அத்தகைய உணவுகளையே மிக மிக விரும்பி உண்கிறோம்.இப்படியான உணவுகள் பெரும்பாலும் கொழுப்புச் சத்துக் கூடியவையாகக் காணப்படுகின்றன.உதாரணமாக Mac,Hungry Jack போன்றவற்றைக் குறிப்பிடலாம்.இவற்றை நாம் தவிர்த்துக் கொள்வது நன்று.

அடுத்ததாக ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமானது உடற்பயிற்சி



தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தைத் தரும்.எம்மில் பலருக்கு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் அதிகம்.அதாவது உடற்பயிற்சி என்ற பெயரில் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடுகிறோம்.

விளையாட்டு உடலுக்குச் சுறுசுறுப்பைத் தரும்.இரத்த ஓட்டத்தைச் சீராக்கி புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.உடலின் பாரத்தை அதாவது எடையை எமது வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற வகையில் பராமரித்தோமானால் எமக்கு நோய் வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவே.

சாதாரணமானவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம்.மிக விரைவாகக் கைகளை வீசிக் கொண்டு நடக்கலாம்.அல்லது ஓடலாம்.உடலில் ஏதாவது சமநிலையற்ற தன்மை அதாவது உடற்பருமன் கூடியோ அல்லது கொழுப்புக் கூடியோ இருந்தால் அவர்கள் தினமும் நாற்பது நிமிடங்கள் மிக விரைவாகக் கைகளை வீசிக் கொண்டு நடக்கவேண்டும் அல்லது ஓட வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

அடுத்ததாக ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமானது சுத்தம்

’சுத்தம் சுகம் தரும்’என்பது ஆன்றோர் வாக்கு. எப்போதும் நாம் எம்மையும் எமது சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.காலையிலும் இரவிலும் பல் துலக்க வேண்டும்.தினமும் குளித்து உடலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.எமது உடைகளைத் தோய்த்து சுத்தமாக அணிய வேண்டும்.கைகளால் வேறு வேலைகள் செய்திருந்தால் சாப்பாட்டுக்கு முன்னர் கைகளைக் நன்றாகக் கழுவ வேண்டும்.

எம்மைச் சுத்தமாக வைத்திருப்பது போலவே எமது சூழலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு நாம் எமது பெற்றோருக்கு உதவ வேண்டும்.தேவையற்ற காகிதங்கள், குப்பைகளை வெளியே வீசாது குப்பைத் தொட்டிக்குள் போட வேண்டும்.

எமது ஆரோக்கிய வாழ்க்கைக்கு மேற் குறிப்பிட்ட அதாவது உணவு,உடற்பயிற்சி,சுத்தம் என்பவற்றை விட இன்னும் பல விடயங்களும் அவசியமானவை.நாம் எப்போதுமே எம்மை சந்தோஷமானவர்களாக வைத்திருக்க வேண்டும்.எடுத்ததற்கெல்லாம் கோபப் படாமல் அமைதியாகவும் ஆழமாகவும் சிந்தித்து செயலாற்றப் பழக வேண்டும்.

அவ்வாறு மகிழ்ச்சியாகவும் சமநிலையாகவும் இருப்பதற்கு யார் யாருக்கு எது எது பிடிக்குமோ அவற்றை நாம் செய்யலாம்.பாடல்கள் கேட்கலாம்,புத்தகங்கள் வாசிக்கலாம்,நண்பர்களுடன் பேசலாம்,நல்ல சினிமாப் படங்கள் பார்க்கலாம். குறைந்தது 7 அல்லது 8 மணி நேர நித்திரையும் நமக்கு அவசியம்.



எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்துள்ள உணவு,உடற்பயிற்சி,சுத்தமான சூழ்நிலை,மனச் சந்தோஷம் என்பன அவசியமானவை என்று கூறி உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.

வருணன்.முருகானந்தன்.
ஆண்டு9+

(12.03.2011 நடைபெற்ற வகுப்பு வேலையில் பேச்சாக வழங்கப் பட்ட ஒப்படை)

2 comments:

  1. I read all the articles today. All are very nicely presented. I hope this method would encourage Tamil writing among our children. Keep on writing. Let Tamil live forever. Thank you Yaso for your effort.

    Merlyn Jesuratnam

    ReplyDelete